கிளிநொச்சி, கல்மடு குளத்திற்கான கள விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் அப்பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை போன்றவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் தரப்பினருடன் கலந்துரையாடினார்.
‘நீர்ப்பாசன செழுமை’ எனும் திட்டத்திற்கு அமைய உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் கல்மடு குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை நேற்று(15.03.2023) பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், இத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதியினை இத்திட்டத்திற்காக உலக வங்கி ஒதுக்கியுள்ள நிலையிலேயே மேலும் 300 மில்லின் ரூபாய் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்மடு குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் 18 அடியிலிருந்து 26 அடி உயரமாக உயர்த்தப்படுவதுடன் அப்பகுதியைச் சேர்ந்த 75 இற்கு மேற்பட்ட நன்னீர் மீன்பிடி குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதுடன் இரண்டாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இத்திட்டம் எதிர்வரும் மழை பருவ காலத்திற்கு முன்னர் முடித்து வைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர் – 15.03.2023
The post கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கரிசனை appeared first on Malayagam.lk.