இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சம் முட்டைகளின் இரண்டாவது தொகையை விநியோகிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
முட்டைகளின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி 20 இலட்சம் முட்டைகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
குறித்த முட்டைகளுக்கான அனுமதியை பெற்றுக்கொள்ள 10 நாட்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் 20 இலட்சம் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாரியளவான வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் உணவகங்களுக்கு குறித்த முட்டைகளை விநியோகிப்பதற்காக முத்துராஜவெல முனையத்துக்கு வருகைத்தந்திருந்த பாரவூர்திகள் தற்போது விநியோக நடவடிக்கைகளுக்காக அங்கிருந்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகளின் பரிசோதனைகள் இன்றைய தினமே ஆரம்பிக்கப்படவுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாதிரிகள் பொரளை வைத்திய பரிசோதனை நிறுவனம், மற்றும் பேராதனை கால்நடை வைத்திய அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.