Colombo (News 1st) பேருவளை – அம்பேபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றை சோதனைக்குட்படுத்திய போது 08 கிலோ 304 கிராம் ஹெரோயின் அடங்கிய 07 பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான சந்தேகநபர் நேற்று(07) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, 07 நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 06ஆம் திகதி தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 544 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வௌியான தகவலையடுத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 11ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற மீனவப் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஆழ்கடல் பகுதியில் 25 ஹெரோயின் பொதிகள் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோயின் தொகையை குறித்த படகிலிருந்த 06 பேர் மற்றும் படகின் உரிமையாளர் ஆகியோர் பகிர்ந்துகொண்டுள்ளமை பின்னர் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, பேருவளை மற்றும் குடாவெல்ல ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள், குறித்த படகிலிருந்த ஹெரோயின் தொகையை பகிர்ந்துகொண்ட இருவர் என்பது தெரியவந்துள்ளது.
ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு முன்னெடுத்து வருகின்றது.